கலிபோர்னியாவில் திருமணம் - சிறுகதை
திசைகள்
ஜூலை 2006 ஆண்டு 04 இதழ் 05
கலிபோர்னியாவில் திருமணம்.
அருணா ஸ்ரீனிவாசன்
"சங்கர், புதன் கிழமை எனக்கு கல்யாணம்". மைக்ரோவேவில் டோர்டிலாவை ( மெக்ஸிகன் சப்பாத்தி - அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் வரப்பிரசாதம்) சுட வைத்துக் கொண்டே சிந்துஜா திடீரென்று ஒரு குண்டைப் போட்டாள்.
ஏதோ நான் அவளைக் காதலிப்பதாகவோ அவள் " நான் உன் தங்கை மாதிரியல்லவா பழகினேன்" வசனம் பேசுவாள் என்று நான் கலங்கப்போவதாகவோ அந்தக் கால ( இந்தக் கால சினிமா கதையே வேற.) சினிமா ரீதியில் கற்பனையை ஓட்டாதீர்கள்.
மம்தா என்னுடன் சேர்ந்து பி.எச்.டி செய்கிறாள். மம்தாவும் சிந்துஜாவும் ரூம்மேட். சிந்துஜா பிஸிக்ஸ் துறையில் பி.எச்.டி வாங்குகிறாளோ இல்லையோ சமையல் கலையில் அதற்கும் மேலே பட்டம் கொடுக்கும் அளவு சமைப்பாள். நானும் என் நண்பர் குழாமும் அடிக்கடி சிந்துஜா இருக்கும் அபார்ட்மெண்ட் பக்கம் காக்காய்களாக சுற்றுவதன் காரணம் இதுதான்.
கலிபோர்னியா யுனிவர்சிடி ஒன்றில் பி.எச். டி படிக்க வந்து ஒரு வருடம் ஆகிறது. முதன் முதலில் நான் இங்கே வந்தபோது கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரியெல்லாம் இல்லை. இணையத்தில் யுனிவர்சிடியின் இண்டு இடுக்கு எல்லாம் படத்தில் பார்த்துவிட்டு, என்ன சாமான் எங்கே கிடைக்கும் / எந்த பஸ் எங்கே போகும் என்றெல்லாம் மனப்பாடம் செய்து விட்டு, எனக்கு பிடித்த ரேஞ்சில் ரூம் மேட் இன்னும் இரண்டு பேரை ( நான் - வெஜ் இல்லாமல்) சேர்த்துக்கொண்டு, சர்வ சகஜமாக இங்கேயே பிறந்து வளர்ந்தவன் போலதான் இங்கு வந்து சேர்ந்தேன். இரண்டே நாளில் "ர" வெல்லாம் " ழ" ஆகும் அளவு தேறிவிட்டேன். ஒரு வாரத்தில் நண்பர்கள் பட்டாளம் நான்கும் எட்டுமாக வளர்ந்து பெரிய வலையாக பின்னிக் கொண்டிருந்தது.
அதனால் சிந்துஜா கல்யாண அறிவிப்பினால் சோகத்துக்கு எல்லாம் இடமேயில்லை. ஆனாலும் அதிர்ச்சியாக இருந்தது. அதென்ன திடீரென்று? அதுவும் எங்களுக்கு தெரியாமல் யாரை அவள் பிடித்து போட்டிருப்பாள்? மனதுள் வேகமாக தெரிந்த நண்பர்களையெல்லாம் 'அவனாக இருக்குமோ? இல்லை இவனா? என்று கணக்குப் போட்டேன்.
பொறுக்காமல் கேட்டே விட்டேன். "அப்படிப்போடு! என்னவோ வாழைப்பழ கேக் செய்தேன் என்கிற மாதிரி சாவகாசமாக சொல்கிறாயே? யார் அது? எப்படி? எப்போ? எங்..... எங்கே?" கேள்விகள் சுளுக்கிக்கொண்டு வந்து விழுந்தன.
"இரு.. இரு.. அவசரத்தில் திணறாதே." மைக்ரோ வேவை மூடிவிட்டு டேபிளில் வெங்காய சாம்பாரை எடுத்து வைத்தாள். ( அவளோ பஞ்சாபி. என்னிடமிருந்து வெங்காய சாம்பாரைக் கற்றுக் கொண்டு என்னிடமே எனக்கு செய்யத் தெரியவில்லை என்று டபாய்ப்பாள்.)
சற்று மௌனத்திற்கு பிறகு, " பிரசாந்த் " என்றாள்.
அடப்பாவி! அவனா? ஆமாம். இரண்டு மூன்று மாசமாகவே இங்கே போகிறேன் அங்கே போகிறேன் என்று காணாமல் போய்க் கொண்டிருந்தாள். ஆனால் அதெப்படி எங்கள் கண்ணில் மண்ணைத் தூவினார்கள் இருவரும். நாங்கள் ஊகிக்கவேயில்லையே.
அப்புறம் என்ன? விவரங்களையெல்லாம் கொக்கி போட்டு அவள் வாயிலிருந்து பிடுங்கி விசாரிக்க ஆரம்பித்தோம் நானும் மம்தாவும், பின்னாலேயே வந்து சேர்ந்த அபிஷேக்கும்.
சொல்லி முடித்துவிட்டு சிந்துஜா சொன்னாள். "சங்கர், அபிஷேக், நீங்கள் இருவரும் கார்த்திக்கூட சேர்ந்து ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கணும். புதன் கிழமை கோர்ட்டில் ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் முதலில். பிரசாந்த் வேலை பார்க்கும் கம்பெனியில் கிரீன் கார்ட் ஏற்பாடு செய்துவிட்டார்கள். கிரின் கார்ட் அவனுக்கு வந்துவிட்டால் பிறகு எனக்கு அவன் மனைவியாக விசா கிடைப்பது கஷ்டம். அதனால்தான் இந்த அவசரம். பிறகு அடுத்த மாதம் இந்தியாவிலிருந்து என் அம்மா அப்பாவும் பிரசாந்த் அப்பா அம்மாவும் வருகிறார்கள்; அப்போது சம்பிரதாயக் கல்யாணம். பிறகு டிசம்பரில் ஊருக்கு போகும்போது ஒரு ரிசப்ஷன்." என்று பெரிய பிளான் விவரித்தாள்.
புதன் கிழமை கோர்ட் போய்ச் சேர்ந்தோம். இருவர் கையிலும் ஆளுக்கொரு பூச்செண்டு. அவ்வளவுதான் அலங்காரம். சிந்துஜாவின் தூரத்து மாமா ஒருவர் அருகில் ஊரில் இருந்ததால் வந்திருந்தார். சாட்சி கையெழுத்து அவரும் நானும் அபிஷேக்கும். மம்தா போட்டோகிராபர். எண்ணி 15 நிமிடங்களில் சிந்துஜாவும் பிரசாந்தும் கணவன் மனைவி என்று அறிவிக்கப்பட்டனர். மறுபடி ஒரு ரவுண்ட் போட்டோ. அடுத்த அரை மணியில் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்.
அடுத்த கொஞ்ச நாளுக்கு சிந்துஜா தன் கல்யாணம் பற்றி தானே வியந்து கொண்டிருந்தாள். "என்னால் நம்பவே முடியவில்லை..." என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நாங்களும் அதையே அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தோம். நேற்றுவரையில் எங்களுடன் உட்கார்ந்து அரட்டை அடித்தவள் திடீரென்று "அந்தப்பக்கம்" தாவி விட்டாளே. அபிஷேக் மாய்ந்து போனான். என்னடா இவள்? ஒரு லிஸ்ட் வைத்துக்கொண்டு, ஏதோ காலையிலே எழுந்து பிரேக்பாஸ்ட் சாப்பிட்டாச்சா? டிக் அடி, லேபுக்கு போனோமா டிக் அடி, சூப்பர் மார்க்கெட் போனோமா அடுத்த டிக், சரி கல்யாணம்? அதுவும் டிக் என்கிற மாதிரி கிடுகிடுவென்று சர்வ சாதாரணமாக வாழ்க்கை லிஸ்டில் டிக் அடித்துக்கொண்டு போகிறாள்?" என்றான்.
அடுத்த மாதமும் வந்தது. சிந்துஜா தன் கல்யாண ஏற்பாடுகளை எங்கள் உதவியில் தானே செய்து கொண்டிருந்தாள். " சங்கர், அம்மா கேட்கிறாள்; ஹால் கிடைக்குமா என்று;"; "குறைந்த பட்சம் ஹிந்து புரோகிதர் கிடைப்பாரா என்று." ஹால் என்றால் செலவு எகிறிக்கொண்டு போகும் என்று புரிந்ததும் கோவில்களை போனில் வலம் வந்தாள். கோவிலில் ஹோமம் செய்வார்களா? மாட்டார்களாமே? சரி. கோவில்தானே ? குருத்துவாராவில் செய்து கொள்ளலாம்; ஹால் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் குருத்துவாராவில் ஹோமம் செய்ய முடியாதே? சங்கர் என்ன செய்யலாம்/ அக்னி இல்லாமல் கல்யாணமா என்று அம்மா கேட்கிறாள்." என்றாள் அடுத்து.
இந்த ரீதியில் அவள் பிரச்சனைகள் எங்களையும் சேர்த்துக் குடைந்தன. அந்தக் காலத்தில் சாவி எழுதிய வாஷிங்டன் திருமணம் நாவல் பற்றி அம்மாவும் அத்தையும் பேசுவது ஞாபகம் வந்தது. இங்கே என்ன ராகபெல்லரா இருக்கிறார்? அப்பளாம் மாமிக்களையும் வடுமாங்காயையும் தனி ஏரோப்பிளேனில் வரவழைக்க?
ஏதோ, எங்களால் ஆனது என்று "சமாளி சிந்துஜா, சமாளி என்று அவளுக்கு மாரல் சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
அவள் பெற்றோரும் பிரசாந்த் பெற்றோரும் வந்தனர். பிரசாந்தின் அபார்ட்மெண்ட் பிளாக்கில் நண்பன் ஒருவன் சமயத்தில் இந்தியா போயிருந்தான். அவனுடைய அபார்ட்மெண்ட் பெண் வீடாயிற்று. காலையில் நாங்கள் அவள் வீட்டில் ஆஜர். முதலில் குருத்துவாரா கல்யாணம் - இரண்டு மணி நேரம் சீக் வேதங்கள் முழங்க. பிறகு "பெண் வீட்டில்" ஹிந்து முறைப்படி இன்னொரு ரவுண்ட் சடங்குகள்.
கல்யாண வீட்டில் உட்கார ஜமக்காளம் / மணமேடையாக - எங்கள் ஸ்லீப்பிங் பேக். நான், கார்த்திக், அபிஷேக், ராஜா, ஷாலினி, பியுஷ், தேவ், கல்யாண் என்று ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டு வந்திருந்தோம். அபார்ட்மெண்டில் விரித்து போட்டோம். அவள் அப்பாவும் அம்மாவும் இரண்டு டிரேயில் சின்ன சின்ன குப்பிகளில் ஏதேதோ வைத்திருந்தனர். எல்லாம் சிந்துஜாவின் அம்மா அக்கறையாக ஊரிலிருந்து எடுத்து வந்திருந்தார். சின்ன தட்டில் வட இந்திய ஸ்டைலில் ஆரத்தி தட்டு - விளக்கோடு.
சிந்துஜாவிற்கு மணப்பெண் அலங்காரம் உதவி மம்தா. ஆனால் அவள் கால்களில் மெட்டிகள் மாட்ட அப்பா உதவிக்கு வந்தார். நம் தமிழ் கல்யாணம் போல இது ஒரு சடங்கு அல்ல. சும்மா இன்னும் ஒரு நகை அவ்வளவுதான். ஒரு விரலில் மாட்ட முடியாமல் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. ஒரு கொரடா இருந்தால் சுலபமாக அகற்றி மாட்டிவிடலாம் என்று சுற்றுமுற்றும் தேடினார். காலியாக இருக்கும் பேச்சலர் வீட்டில் அதெல்லாம் எங்கே இருக்கும்? " சங்கர் , ஒரு கொரடா இருக்கா பாரேன் என்றார். அப்போதுதான் அபிஷேக்கும், கார்த்திக்கும் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் காதில் பெண்ணின் அப்பா ஒரு கொறடா / பிளையர் கேட்டது மட்டும்தான் விழுந்தது. கல்யாண வேலையாயிற்றே? எதற்கு கேட்கிறாரோ என்னவோ? " இதோ இருங்கள் அங்கிள் ஒரு நொடியில் கொண்டு வருகிறேன் " என்று வெளியே அபிஷேக் விரைந்தான். அடுத்து அங்கிள் மண்டப வேலைகளை தயார் செய்ய ஆரம்பித்தார். "சங்கர், நீ இங்கே வா. இந்த சி.டியைப் போடு" என்றார். போட்டேன். கும்மென்று பஞ்சாபி கல்யாணப் பாட்டுகள் களை கட்டின. " கார்த்திக், நீ வா இங்கே. அடுத்து உனக்கு ஒரு முக்கியமான வேலை. இங்கே இந்த கம்ப்யூடரில் இந்த மந்திரங்கள் எல்லாம் இருக்கும் சிடியைப் போட வேண்டும். 40 பாராக்கள் இந்த நோட்டில் எழுதி வைத்திருக்கேன் பாரு. நீதான் கல்யாணம் பண்ணி வைக்கும் புரோகிதர். மந்திரங்களை டில்லியில் ஒரு புரோகிதர் சொல்ல இதில் பதிவு செய்துள்ளோம். வரிசையாக இது வரும் அங்கங்கே சில சடங்குகள் வரும்போது நிறுத்திவிட்டு மறுபடி தொடர வேண்டும். சங்கர், உனக்கு வேலை பிள்ளை வீட்டுக்காரர்களை " அழைத்து" வர வேண்டும்.
நான் குறுக்கிட்ட்டேன். 'அங்கிள். அதெல்லாம் கவலைப் படாதீர்கள் பிரசாந்த்துக்கு இந்த அபார்ட்மெண்ட் நல்ல பழக்கம். தானே வந்து விடுவான். " என்றேன்.
அங்கிள் சிரித்தார். " அப்படியில்லையப்பா... சம்பிரதாயப்படி மணப்பெண்ணின் சகோதரன்தான் பிள்ளை வீட்டுக்காரர்களை அழைத்து வர வேண்டும். அதுதான் எங்கள் "பராத்". நீதான் சகோதரன் என்று ஒரு போடு போட்டார்.
உடனே நான் கிளம்பினேன். "மண மேடையில்" ஏற்பாடுகளில் அங்கிளுக்கு உதவி கார்த்திக், பியூஷ் மற்ற நண்பர்கள்.
அடுத்த அபார்ட்மெண்ட் பிளாக்கில் இருந்த பிரசாந்த்தையும் பெற்றோரையும் என் காரில் "பராத்" அழைத்து வந்தேன். மாடியேறி பெண் வீட்டை அடைந்ததும் வாசலில் சிந்துஜா அம்மா தயாராக காத்துக்கொண்டிருந்தார். " இரு.. இரு... பராத் வரவில்லையேயென்று இத்தனை நேரம் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொல்லும்போது என் கற்பனையில் நான் பார்த்த இந்தி சினிமா கல்யாண ஊர்வலங்களும், வாசலுக்கும் பெண்ணின் அறைக்கும் அலையும் அம்மாக்களும் வந்து போனார்கள்.
அவர் ஆர்த்தி எடுத்து முடித்ததும் வலது காலை வாசல்படியில் சிந்துஜாவின் அம்மா வைத்திருந்த ஒரு அலங்கரித்த பலகையின் மேல் வைத்து உள்ளே நுழைந்தான் மாப்பிள்ளை. ஸ்லீப்பிங் பேக் மேல் விரித்திருந்த டேபிள் கிளாத்தான் "மண மேடை". அதில் பிரசாந்தை உட்காரச் சொன்னார் அவன் மாமனார். அடுத்து, "ம்.. கார்த்திக். உன் புரோகித வேலையை ஆரம்பி" என்று அவர் சிக்னல் கொடுத்ததும், கம்யூடரை ஆன் செய்தான் கார்த்திக். இதன் நடுவில் மூச்சிறைக்க ஓடி வந்தான் அபிஷேக். " அங்கிள் இந்தாங்க பிளையர் என்றான்." நாங்கள் சிரித்தோம். " ஏண்டா பட்டரையில் செய்து கொண்டு வந்தயா? எங்கே போயிருந்தாய்?" என்றேன். ஆமாண்டா. அங்கிள் பிளையர் கேட்டார். எதற்கோ என்னவோ? எப்படியாவது கொடுக்க வேண்டாமா? இங்கே ஒரு Home Depot ஸ்டோர் இருக்கு. நின்று, திறந்தவுடன் வாங்கி வந்தேன்." என்றான்.
அதற்குள் கம்ப்யூடரில் டில்லி புரோகிதர் மந்திரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் ஹிந்தியில் அவ்வப்போது சொல்வதற்கேற்ப சிந்துஜாவின் அப்பா ஒரு சிறு தட்டில் ஸ்பூன் ஸ்பூனாக தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். ' மண மேடையில்' கம்ப்யூடர் புரோகிதர் அக்னியை வைக்கச் சொன்னார். சிந்துஜாவின் அம்மா சிம்னி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார். நான் வியந்தேன். அதானே?..... அக்னியை ஹோமம் மூலம்தான் கொண்டு வர வேண்டும் என்று யார் சொன்னது? இதோ சிந்துஜாவின் அம்மாவுடைய பிரில்லியண்ட் வழி, என்று அவர் சாமர்த்தியத்தை ரசித்தேன். நடுவில் மீண்டும் சிந்துஜா அப்பா என்னைக் கூப்பிட்டார். "சங்கர், இங்கே வா. நீதான் பெண்ணின் சகோதரனாச்சே. இந்தப் பொரியை எடுத்து அவள் கையில்கொடு; அதை அவள் பிரசாந்த் கையில் கொடுப்பாள். பின்னர் ஒவ்வொரு மந்திரமும் முடிந்தபின் அவங்க இரண்டுபேரும் அக்னியை சுற்றி வருவார்கள். ஒரு சுற்று முடிந்ததும் சிந்துஜா நீ இந்த தட்டில் போட்டிருக்கும் ஏழு கோட்டில் ஒன்றை கால் கட்டை விரலால் அழிக்க வேண்டும். பிரசாந்த், சிந்துஜாவிடம் வாங்கிய பொரியை, இந்த "அக்னி" இருக்கும் தட்டில் போடுவார். இப்படி ஏழு முறை வலம் வந்தால் சப்தபதி ஆகிவிடும்." என்று அடுத்த கட்டம் பற்றி விளக்கினார்.
நான் சிந்துஜாவின் பின்னே நின்று பொரியை அவள் கையில் கொடுத்தேன். அதை அவள் வாங்கும்போது கம்ப்யூடர் புரோகிதர் மந்திரத்தை நிதானமாக விளக்கினார். சுருக்கமாக நமக்கு புரியும் மொழியில் சொன்னால் அது 7 கண்டிஷன். மணப்பெண், மண மகனிடம், " நான் இப்படியெல்லாம் உன்னிடம் உரிமையாக இருப்பேன்; நான் கஷ்டபப்டும்போது நீ உதவ வேண்டும்; நீ சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்; என்ற ரீதியில் மணமகள் போடும் கண்டிஷனுக்கெல்லாம் மண மகன் ஒத்துக்கொண்டு பொரியை வாங்கி "அக்னியில்" போட்டு கண்டிஷன்களையும் அவளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் ஒவ்வொரு கண்டிஷனையும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தோம். ஆஹா.... என்ன மாதிரியான Memorundum of Understanding!! என்ன ஒரு கச்சிதமான contract!!
ஒரு வழியாக மந்திரங்கள் முடியும் தருவாயில் 'மாங்கல்யம் தந்துநானே" வும் முடிந்து, பிரசாந்து அவள் கழுத்தில் அவர்கள் வழக்கப்படி ஒரு கருக மணி செயினைப் போட்டான். அடுத்து சிந்தூர் வைத்தான்.
ஆச்சு. கல்யாணமும் முடிந்து, அரை மணியில் மணப்பெண் "டோலி" - அதாவது புக்ககம் - செல்ல தயாரானாள். கிளம்பி வாசல் வரும்போது மாப்பிள்ளை செருப்பைக் காணோம். மம்தா நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். ஆக, வட இந்திய திருமண சடங்குகளில் முக்கியமான ஒன்றான, மணப்பெண்ணின் தங்கை மாப்பிள்ளையின் செருப்பை ஒளித்து வைக்கும் வைபவமும் நடந்தேறியாச்சு. ஒரு வழியாக செருப்பை திரும்ப வாங்க பிரசாந்த் மம்தாவிடம் பேரம் பேசி முடித்து மணப்பெண் "டோலி" - புக்ககம் - கிளம்பினாள், அடுத்த பிளாக்குக்கு.
சிந்துஜா கல்யாணமே வைபோகமே.......
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home